MOHAMED JABRULLAH ZAINAB LAMIAH
உலகம் முழுதும் உருண்டு அலைந்தாலும்
விலகா அன்பு நிறைந்த உறவு
எல்லா நிலையிலும் இயைந்து ஏற்கும்
சொல்லில் அடங்கா சொர்க்க புரியாம்
முற்றாய் எமக்காய் தியாகம் செய்வோர்
பெற்றார் தவிர வேறேதும் இல்லை.
தாயின் மடியில் தளைக்கும் அன்பு
நோயின் போதும் நொந்து போகா
பாயும் ஊற்றாய்ப் பரவிச் செல்லும்
நேயம் மிகுந்து நெடுநாள் தொடரும்
மாறி விடாது மங்காது ஒளிரும்
ஊறிக் கொண்டே ஓங்கி நிற்கும்.
தந்தை அன்போ தனித்த தன்றோ
மறைந்து நின்று மாண்பு காட்டும்
விந்தைகள் புரிய விவேகம் பெருக
ஆளுமை உயர்ந்து நாளும் செழிக்க
வாழ்த்தும் உறவே வகையினில் அடங்கா
சூழ்ந்த பிதாவின் புனித அன்பு.
இளமையில் இனிக்கும் பெற்றோர் அன்பு
இல்லா திருத்தல் இகத்தினில் இழிவு
முழுமை பெறாது மீதி வாழ்வும்
செழுமை நீங்கிச் சோம்பிக் கிடக்கும்
சிறிய வயதினர்க்(கு) (அ)கன்பு செலுத்த
பிரியம் வைத்தல் பெற்றோர் கடமை.
அளவு கடந்து போடும் உரமோ
வளரும் பயிரை அழிப்பது போல
அளவுக் கதிக வெளிப்படை அன்பு
இளையோர் வாழ்வைக் கெடுத்து நிற்கும்
கட்டுப் பாட்டுடன் கடிந்து வளர்த்தால்
கட்டுப் படுவர் எதிர்கால வாழ்விலும்.
பெற்றோர் அன்பு புனிதம் மிக்கது
சொற்கள் கொண்டு விளக்க நில்லாது
இறுதி வரைக்கும் உறுதி வாய்ந்தது
பெறுதல் மட்டும் பொறுப்பு அல்ல
முடிவு வரையும் பேணுதல் கடமை
விடிவு கிடைக்கும் வழியிது ஒன்றே.
மு.ஜ.ஸைனப் லாமிஆ
முதலாம் வருடம் – நிந்தவூர்
பதிவிலக்கம் : 1315


